×

ஆரணி அருகே கம்பத்தில் கட்டி வைத்தனர் மாணவனுக்கு போதை ஊசி போட முயன்ற வாலிபருக்கு தர்ம அடி

ஆரணி : பள்ளி மாணவனுக்கு போதை ஊசி போட முயன்றதாக வாலிபரை பொதுமக்கள் பிடித்து கம்பத்தில் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த ராட்டிணமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி நித்தியானந்தத்தின் 15 வயது மகன் அங்கு உள்ள அரசு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். தற்போது பொதுதேர்வு எழுதிவிட்டு வீட்டில் இருந்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை நித்தியானந்தம் தனது மகனைஅதே பகுதியில் உள்ள அவரது விவசாய நிலத்தில் உள்ள மாடுகளை ஓட்டி வருமாறு கூறியுள்ளார். இதனால் ராகுல் மாடுகளை மேய்த்துவிட்டு, ராட்டிணமங்கலம் பெருமாள் கோயில் வழியாக மாடுகளை ஓட்டி வந்துள்ளார்.

அப்போது அங்குள்ள புளிய மரத்து அடியில் 2 வாலிபர்கள் மது குடித்துவிட்டு, போதையில் கையில் போதை ஊசி வைத்துக் கொண்டு, மாணவனை அழைத்துள்ளனர். இதனால், பயந்துபோன சிறுவன் அங்கு செல்லாமல் மாடுகளை வேகமாக ஓட்டிக்கொண்டு சென்றுள்ளார்.

உடனே அந்த வாலிபர்கள் சிறுவனை மடக்கி, கூப்பிட்டால் வர மாட்டாயா எனக்கூறி திட்டி உள்ளனர். தொடர்ந்து, அவர்கள் கையில் வைத்திருந்த போதை ஊசியை காண்பித்து ஊசியை போட்டுக் கொள்ளுமாறும், மிரட்டி உள்ளனர்.இதனால் அதிர்ச்சியடைந்த சிறுவன் மாடுகளை விட்டுவிட்டு தன்னைக் காப்பாற்றுமாறு கூச்சலிட்டவாறு, அங்கிருந்து தப்பி ஓடினார்.

அப்போது, அங்கிருந்த பொதுமக்கள் சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்து கேட்டபோது தனக்கு போதை ஊசி போடுவதற்காக தன்னை துரத்தி வருவதாக தெரிவித்தார். உடனே பொதுமக்களை கண்டதும் அந்த வாலிபர்கள் கையில் வைத்திருந்த போதை ஊசியுடன் அங்கிருந்து தப்பி ஓடினர். தொடர்ந்து, பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் அந்த வாலிபர்களை துரத்திச் சென்றனர்.

அதில், ஒரு வாலிபர் சிக்கிக்கொண்டார். மற்றொருவர் அங்கிருந்து தப்பி ஓடினார். உடனே சிக்கிய வாலிபரின் கையில் வைத்திருந்த போதை ஊசியை பறிமுதல் செய்து அவரை கம்பத்தில் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்தனர். தகவல் அறிந்து வந்த ஆரணி தாலுகா போலீசார் கம்பத்தில் கட்டி வைத்திருந்த அந்த வாலிபரை பொதுமக்களிடம் இருந்து மீட்டனர்.படுகாயம் அடைந்த அவரை ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

தொடர்ந்து போலீசார் விசாரணை செய்ததில், அந்த வாலிபர்கள் காஞ்சிபுரம் பல்லவர் மேடு பகுதியைச் சேர்ந்த கார்த்திக் (எ)பிட்டா(19), கூலி தொழிலாளி, அதேபகுதியைச் சேர்ந்த ஹரிஷ் (எ) டியோ(20), என்பதும், இவர்கள் இருவரும் ஆரணி அடுத்த அடையபுலம் கிராமத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு பைக்கில் வந்ததும், அப்போது ராட்டிணமங்கலம் கிராமத்தில் மது அருந்திக்கொண்டு, அவ்வழியாக சென்ற பள்ளி மாணவனுக்கு போதை ஊசி போடமுயன்றதும் தெரியவந்தது.

இதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கார்த்தியை தாலுகா போலீசார் நேற்று கைது செய்து ஆரணி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் தப்பியோடிய ஹரிஷை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். ஆரணி அருகே பள்ளி மாணவனுக்கு போதை ஊசி போட முயன்ற வாலிபரை ஊர் பொதுமக்கள் பிடித்து கட்டி வைத்து தர்ம அடி கொடுத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post ஆரணி அருகே கம்பத்தில் கட்டி வைத்தனர் மாணவனுக்கு போதை ஊசி போட முயன்ற வாலிபருக்கு தர்ம அடி appeared first on Dinakaran.

Tags : Arani ,Nityyanand ,Rattinamangalam ,Tiruvannamalai district ,
× RELATED பைக் திருடும் மர்ம ஆசாமி வீடியோ வைரல் ஆரணியில் நள்ளிரவில்